0

Enter your keyword

2014

2014

இரண்டு வருட விவசாயத்தில் தற்சார்போ, பொருளாதார முன்னேற்றமோ இல்லாததால் முகநூல் உதவியால் வானகம் பயிற்சிக்கு சென்றபோது, இயற்கை வழி விவசாயத்தின் அடிப்படைகளையும், மரபு விதை பற்றிய விழிப்புணர்வை பெற்றேன்.

நாட்டு விதை விற்பவர்கள், விதைக்கடைகள்,என  விதைகள் சேகரித்ததில் ஒட்டு விதைகளின் கலப்பும் இருந்தது. அதனால் நேரடி விதை சேகரிப்பில் சேகரித்த விதைகளை தோட்டத்தில் விதைத்து அதிலிருந்து விதை எடுத்து சேமித்தேன்.

கத்தரியில் தமிழகத்தில் மட்டுமே 400-500 ரகங்கள் இருக்கும் என்பதை கடந்த இரு வருடங்களில் விதை பயணத்தில் தெரிந்து கொண்டேன்.

தற்போது 50க்கும் மேற்பட்ட கத்தரி ரகங்கள் உட்பட 150ரக காய்கறி கீரை ரகங்களை பாதுகாத்து வருகின்றேன்.

முகநூல்,வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் நண்பர்களை தொடர்பு கொண்டு மாவட்டம் தோறும் அவர்களுடைய பகுதியில் உள்ள நாட்டு விதைகளின் தகவல்களை தெரிந்து கொள்கிறோம். பிறகு அந்த குறிப்பிட்ட விதைகளை பற்றிய தகவல்கள்,விதைகளை பாதுகாத்து வரும் விவசாயிகள்,வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களின் தகவல்களை கேட்டறிந்து அவர்களிடமிருந்து விதைகளையும் நட்பையும் பெற்றுக்கொள்கிறோம்.

சேகரித்த விதைகளை என்னுடைய தோட்டத்திலும், அனுபவமுள்ள வீட்டுத்தோட்ட நண்பர்களிடமும் கொடுத்து விதைகளை திரும்ப பெற்று பாதுகாத்து கொள்கிறோம்.

நான் விதை சேகரிப்பதை சமூகவலைதளங்களில் தெரிந்து கொள்ளும் நண்பர்கள் அஞ்சல் மூலம் விதைகளை அனுப்புகின்றனர்.

சேகரித்த விதைகளை வெறுமனே வீட்டில் வைக்காமல் விவசாயிகளுக்கும், வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும், விதை சேகரிக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கின்றேன். சமூக வலைதளங்களில் விதைகளை பற்றிய தகவல்களை கேட்டறிந்து அருகில் இருப்பவர்கள் நேரடியாகவும், மற்றவர்களுக்கு அஞ்சல் மூலமாகவும் விதைகளை அனுப்பி வைக்கின்றேன்.

பள்ளிகளில் மதிய உணவுக்காக காய்கறி தோட்டம் அமைத்து கொடுத்து அவர்களுக்கும் என்னிடமுள்ள விதைகள் கொடுத்து சாகுபடி செய்து கொள்ள சொல்கிறோம். அவர்கள் பள்ளியில்சேகரிக்கும் விதைகளை அந்த மாணவர்களின் வீட்டில் தோட்டம் அமைத்து கொள்ள பயன்படுத்திக்கொள்ள சொல்கிறோம்.

திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்வுகளுக்கு வரும் நண்பர்கள் உறவினர்களுக்கு தாம்பூல விதைப்பைகள் என்ற பெயரில் அடிப்படையான காய்கறி கீரை விதைகளை பெரிய அளவில் கொடுக்கின்றோம். இதன் மூலம் ஒரே நேரத்தில் நிறைய நண்பர்களுக்கு நாட்டு விதைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியமும், வீட்டில் தோட்டங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற தூண்டுதலையும் கிடைக்கிறது.

ஒவ்வொரு மாதமும் தோட்டம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு அழைப்பு கொடுத்து அவர்கள் இருக்கும் நகரத்தில் விதை பகிரும் சந்திப்பை நடத்துகிறோம். இதனால் விதைகள் மற்றவர்களுக்கு எளிதாக பரவுகிறது.

தற்போது இருக்கும் கிராமத்தில் விதை வங்கியாக செயல்படுகிறோம். விதைகள் தேவைப்படும் விவசாயிகளுக்கு விதைகளை பகிர்ந்து கொடுக்கிறோம். விதை எடுத்து திரும்ப கொடுக்கின்றனர்.

கிராம விதை வங்கி துவங்க நினைக்கும் கிராமத்து நண்பர்களுக்கு எங்களிடம் உள்ள விதை சேகரிப்பில் உள்ள விதைகளை கொடுத்து விதை பெருக்கம் செய்து கொள்ள சொல்கிறோம்.

ஒரு செண்ட் இடத்தில் ஒரு குடும்பத்திற்கான காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் தோட்டத்தை அமைத்து கொடுத்து நாட்டு விதைகளையும் அவர்களிடம் கொடுத்து பராமரிக்க சொல்கிறோம். இந்த வீட்டுத்தோட்டங்கள் மூலம் தான் என்னிடம் தற்போது அதிகமான ரகங்கள் சேர்ந்துள்ளன.

தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு ரக கத்தரி ரகங்களையும் சேகரிக்க வேண்டும். அதனோடு அனைத்து நாட்டு ரக காய்கறி,கீரை,மானாவரி பயிறு,தானியங்களின் விதைகளை பாதுகாக்கும் அனைத்து கட்டமைப்புகளையும் கொண்ட மாதிரி கிராம விதை வங்கியாக செயல்பட வேண்டும்.

ஒரு குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு செண்ட் மாதிரி காய்கறிதோட்டத்தை வெற்றிகரமாக அமைத்துக்கொண்டுள்ளோம். அந்த தோட்டங்களை சிறிய அளவு விதை வங்கிகளாக பரவலாக்க வேண்டும்.